search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை பொருட்கள்"

    புதுக்கோட்டை சிறையில் இன்று 50க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #PudukkottaiJail
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட சிறை மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் உள்ளனர். இந்தநிலையில் சிறையில் சட்டவிரோதமாக போதை பொருட்கள், செல்போன் மற்றும் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் புதுக்கோட்டை டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்ட கிளை மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

    புதுக்கோட்டை மாவட்ட சிறையில் உள்ள 50க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளிடமும், சீர்திருத்த பள்ளியில் உள்ள 25க்கும் மேற்பட்ட தண்டனை மட்டும் விசாரணைக்கு உட்பட்ட கைதிகளிடமும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    கைதிகளின் ஒவ்வொரு அறையாக சென்று செல்போன் , போதைப் பொருள் ,ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என்று அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கைதிகளின் அறைக்குள் இருந்து கட்டுக்கட்டாக பீடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. செல்போன், போதை பொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட எந்தவித பொருளும் சிக்கவில்லை. இருப்பினும் அவ்வப்போது சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். புதுக்கோட்டை சிறையில் போலீசார் இன்று நடத்திய திடீர் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.

    தூத்துக்குடியில் இன்று போலீசார் நடத்தி சோதனையில் பல லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு்ள்ளனர். #TuticorinPort
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துறைமுகத்திற்கு தினமும் பல்வேறு நாடுகளில் இருந்து சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி ஆகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் சிலர் வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதை வஸ்துக்கள் உள்ளிட்டவற்றை கடத்தி வந்துவிடுவதாக போலீசருக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து போலீசார் மற்றும் உளவுப்பிரிவினர், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறார்கள்.

    இந்த நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்

    அப்போது, மேட்டுப்பட்டியை சேர்ந்த வ.உ.சி. துறைமுக ஊழியரான அப்துல்காதர் ஜெய்லானி(வயது 40) என்பவர் வீட்டின் முன்பகுதியில் உள்ள குடிசைக்குள் 400 பண்டல் வெளிநாட்டு சிகரெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதே போன்று 11 வெளிநாட்டு மதுபாட்டில்களும் இருந்தன. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிகிறது.

    உடனடியாக போலீசார் அப்துல்காதர் ஜெய்லானியை கைது செய்தனர். அவரிடம் இருந்து வெளிநாட்டு சிகரெட்டுகள், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தூத்துக்குடியில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தி 9 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    தூத்துக்குடி மணல் தெருவை சேர்ந்தவர் ஜெரீசன்(வயது 50). கூலி தொழிலாளி. இவர் போதை பொருட்கள் பதுக்கிவைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தூத்துக்குடி தென்பாகம் போதை தடுப்பு சிறப்பு தனிப்படை போலீசார் நேற்று நள்ளிரவு ஜெரீசன் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். சோதனையில் அவரது வீட்டில் 9 கிலோ போதை பேஸ்ட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் ஜெரீசனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கொடுத்த தகவலின்பேரில் இதில் தொடர்புடைய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதையடுத்து ஜெரீசன் வீட்டில் இருந்த 9 கிலோ போதை பொருளையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பும் பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, தாளமுத்து நகர், வடபாகம், திரேஸ்புரம், மட்டக்கடை, தென்பாகம் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக அதிக அவில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக தினமும் போலீசார் வழக்குப்பதிவு செய்த வருகின்றனர். எனினும் கஞ்சா விற்பனையை போலீசாரால் தடுக்க முடியவில்லை.

    இதனால் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகின்றனர். இதையடுத்து அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுத்து வேண்டும் என்றனர். இதனிடையே பொதுமக்கள், தங்கள் குடியிருப்பு அருகே கஞ்சா, லாட்டரி சீட்டு போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களின் புழக்கம் இருந்தால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். #TuticorinPort
    கம்பம் நகராட்சி பகுதிகளில் குடோனில் பதுக்கிய ரூ. 5 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    கம்பம்:

    கம்பம் நகராட்சிப் பகுதிகளில் பல்வேறு கடைகளிலும் தடைசெய்யப்பட்ட போதை தரும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து தனிப்பிரிவு போலீசார் ரகசிய விசாரணையில் இறங்கினர்.

    விசாரணையில், கம்பம் நகரில் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் 2 மொத்த வியாபாரிகள் இருப்பதாக கண்டறிந்தனர். இதையடுத்து போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், மணிநகரம் கிளப் சாலையில் ஒரு குடோனை சோதனை செய்தனர்.

    அதில் மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும், புதிய வகை போதை தரும் பேப்பரும் பாக்கெட் பாக்கெட்டாக இருந்ததும், தெரியவந்தது. இதையடுத்து கம்பம்தெற்கு போலீசார் ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலை மூட்டைகளை கைப்பற்றி, இவற்றின் உரிமையாளரான வெங்கடேசன் (53) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

    பறிமுதல் செய்த புகையிலை மற்றும் போதை தரும் பேப்பர் பண்டல்களை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி காஞ்சனாவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
    தர்மபுரி நகரில் உள்ள கடைகளில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு கடைகளில் போதை பொருட்களான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி ஆலோசனையின் பேரில் டவுன் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரம், கிருஷ்ணவேணி, கோபி மற்றும் போலீசார் தர்மபுரி நகரில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக குமார் (வயது 54), மணிவண்ணன் (42), ராஜேந்திரன் (58), சண்முகம் (40), ராமமூர்த்தி (42), ராஜேஸ்வரி (44), கலைவாணி (55) உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ரமேஷ்குமார், லாலாம் சவுதிரி ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 
    ×